×

ஊட்டி நூலகத்தில் 116 ஆண்டு பழமையான புத்தகம் திருட்டு

*இன்ஸ்டா பதிவால் சிக்கிய பெங்களூர் வாலிபர்

ஊட்டி : ஊட்டியில் உள்ள நூலகத்தில் 116 ஆண்டு பழமை வாய்ந்த புத்தகத்தை திருடிச்சென்ற பெங்களூரு வாலிபர், புத்தகம் விற்பனைக்கு என இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்ததால் போலீசில் சிக்கினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்டேட் வங்கி அருகே மருத்துவமனை சாலையில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின்போது உருவாக்கப்பட்ட நீலகிரி நூலகம் உள்ளது. நூற்றாண்டு கடந்த இந்த நூலகத்தில் ஆங்கிலேயர் காலத்து பழமையான நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்கள் படித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்நூலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் இலக்கிய திருவிழா நடந்தது.

விழாவையொட்டி புத்தக கண்காட்சியும் நடத்தப்பட்டது. விழா நிறைவடைந்த பின்னர் நூலக நிர்வாகிகள் அனைத்து புத்தகங்களும் சரியாக உள்ளனவா? என ஆய்வு செய்துள்ளனர். அப்போது நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த லண்டனில் அச்சிடப்பட்ட 1907 வருடத்து புத்தகமான ‘பைரேட்ஸ் ஆப் மலபார்’ என்ற 116 ஆண்டு பழமையான புத்தகம் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இது குறித்து நூலக நிர்வாகி சந்திரமோகன் ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் நீலகிரி நூலகத்தின் முத்திரையுடன் கூடிய அந்த புத்தகம் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரப்படுத்தி இருந்தார். இதனை அறிந்த போலீசார் அந்த இன்ஸ்டாகிராமில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை எடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் விவரங்கள் சேகரித்தனர். அப்போது அந்த நபர் பெங்களூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்வதற்காக உதவி ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் பெங்களூரு விரைந்தனர்.

அங்கு சென்று கதித்ரா தேப்நாத் (34) என்ற அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து புத்தகத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்தபோது நீலகிரி நூலகத்தில் இருந்து அந்த புத்தகத்தை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட பெங்களூரை சேர்ந்த நபர், பழமையான புத்தகங்களை திருடி அவற்றை விற்பனை செய்வதை தொழிலாக வைத்துள்ளார். அவர் இருந்த அறையில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நூலகங்களில் திருடப்பட்ட ஏராளமான புத்தகங்கள் இருந்தன’’ என்றனர்.

The post ஊட்டி நூலகத்தில் 116 ஆண்டு பழமையான புத்தகம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ooty library ,Bangalore ,Insta post ,Ooty ,Dinakaran ,
× RELATED எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ்...